Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Thursday, February 2, 2017

ஆயாவின் வீடு

கமற்கட்டு கைகடிகாரமும்
மஞ்சள் வர்ண பஞ்சுமிட்டாயும்.. இருபதாம் நூற்றாண்டு பார்த்திடாத ஒன்று... எத்தனை பகுத்தறிவு வளர்ந்தபோதிலும் ஆட்டின் ரத்தம் ஊற்றிய சோற்றை உருட்டி வானத்தில் எரிந்து அது மீண்டும் பூமியில் விழாமல் கருப்பன் சாப்பிட்டுவிடுவான் என நம்பி  பயத்தில் குனிந்து கீழே பார்க்கும் மக்களும் நம்மிடத்தே உண்டு...

என்னை பொறுத்த மட்டிலும் இவ்வளர்ந்த நாகரிகமே மூடத்தணுமும் எழில் அழகும் கொஞ்சும் பல பண்டிகைகளை சற்று நம்மிடையே மழுங்க செய்திருக்குறது..

ஐடி ஆபிஸில் அமர்ந்து பொங்கல் தீபாவளி அன்றைக்கு மட்டும் என் தாத்தன் அன்றாடம் உடுத்திய வேட்டியை வேல்க்ரோத் வைத்து ஒட்டிக்கொள்ளும் சமுகத்தின் மிச்சமாகிய நான் சென்ற என் கிராமத்தின் திருவிழா விசிட் இது.. என் கூட்டத்தின் நினைவுகள் இது

என் அம்மா வழி பாட்டியின் (ஆயா)  ஊர் "கிழச்சேவல்ப்பட்டி", என் ஆயா வாக்க பட்ட ஊர் அது.. என் அம்மா விளையாடி திரிந்த ஊர் அது... தலை பிரசவத்திற்காக அவள் அம்மா வீட்டிற்க்கு சென்று என்னை பேருவலியுடன் பெற்றடுத்த ஊர்.... இன்று நகரத்திற்கும் கிராமத்துக்கும் மத்தியில் மாட்டி முழிக்கும் ஊர் அந்த கீழச்சேவல்பட்டி... திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழி சிவகங்கை பரமக்குடி போகும் பேருந்தே அந்த ஊரின் அடையாளம் சொல்லும்.. "பொன்னமராவதி ஆர்ச்சுல எறங்கி வள்ளி ஐஸ்சு கம்பெனி எதுன்னு கேட்டா நம்ம வீட்டுக்கு வந்திடலாம்" என என் ஆயா வழி சொல்லிய நாட்கள் என் நெஞ்சில் இன்றும் மிதக்கும் பசுமையான நினைவுகள்... மாமா, மாமி..பெரியப்பா.. பெரியம்மா... அண்ணன், அண்ணமண்டி(அண்ணி) என என் ஆயா வீடே நிரம்பி வழிந்தது பொன்னழகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக... மேலும் வைத்தீஸ்வரன் கோவில் பாதயாத்திரை, நவராத்திரி, படைப்பு போன்ற சில தேர்ந்தெடுக்கபட்ட நாட்களில் தான் என் ஆயா கண்ணில் முழு நிறைவும் ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும்... மேலும் பேரன் பேத்திகள் ஆண்டு விடுமுறைக்கு வரும்போது இதில் முப்பது சதவிகித ஆனந்தத்தை பார்க்கலாம்...

வீட்டில் நான் நுழையும் முன்பே வாசலில் ஓடி வந்து "வாங்க அண்ணா" என்று சொல்லிவிட்டு ஓடும் குட்டிஸ்களை பார்க்கும் போதே அப்பாடி ஒரு வழியா வீட்டுக்கு வந்துட்டோம்னு தோன்றும்.. உள்ளே போக அத்தனை சொந்தங்களின் வரவேற்பையும் ஒன்று விடாமல் வாங்கி "ஆமா" என்ற ஒற்றை பதிலை தூவியபடியே என் கண்கள் முதலில் தேடுவது என் சித்தியைத்தான்.. சற்றே ஓய்வுக்கு பின் ஒட்டு மொத்த குடும்பமே ஒன்றாய் அமர்ந்து அரட்டை அடிக்கும் அந்த ஒரு சுகத்திற்காகவே தினமும் ஒரு விஷேசம் வராதா என தோன்றும்.. ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து.. சிறிது கதை பேசி.. சிரித்து கேளிக்கைகள் செய்து ஒரே நேரத்தில் அலாதி இன்பத்தை அனுபவித்து கொண்டிருக்கையில் உதிர்ந்த முத்து பற்கள் வழியே நடுங்கிய குரலில் ஒலிக்கும் "பாலு.. நல்லா இருக்கியா" என்ற  ஆயாவின் அந்த ஒற்றைவரி கேள்வியில் அத்தனை சுகமும் வந்து தோளில் உட்கார்ந்துகொள்ளும்.. மதிய நேரம் நெருங்கையில் மாமாகழுடன் அமர்ந்து வாழையிலை பந்தியில் தொந்தி நிரப்புவது அலாதி இன்பம் அதன் இடையிலும் மாமிக்கள் நாம் அசந்துஇருக்கும் நேரம் நம் இலையை நிரப்புவது ஒரு குட்டி அதிர்ச்சி... கழுத்துவரை உண்ட போதிலும் சக்கரை நோய்க்கு பயந்து ஆயா ஆக்கி வைத்த கேப்பை கூழ் கட்டியில் இரண்டை மோர் கலந்து அடித்ததால் வரும் உண்ட மயக்கம்.. நவீன மதுக்களில் கிடைக்குமா என்பது சந்தேகமே... அனைவரும் களைப்பில் அயர்ந்திட ஆயாவின் கால் பிடித்து கொண்டே பேசும் பொழுதுகள் சற்றே புத்துணர்ச்சி தரும் எனக்கு..

சாயங்காலம் மாமக்களின் காரில் ஏறி கோவிலை நோக்கி புறப்பட போகும் வழியில் மாமா, பெரியம்மாவின் பால்ய பருவ நினைவுக்களை பேசிக்கொண்டே செல்லும் பொது அங்கே car ரேடியோவில் இசைத்து கொண்டிருந்த இளையராஜா சற்றே மங்கித்தான்
போய் இருப்பார்.. கோவிலுக்கு சென்று எங்கள் வீட்டு மாப்பிள்ளைகளாகிய அய்த்தான் பெரியப்பாக்களோடு கோவில் திண்ணையில் அமர்வதும், மாமக்கள் அண்ணன்களோடு ஓடி ஓடி திரிவதும் நமது தனிப்பட்ட விருப்பம்..

சின்ன கோவில்தான் அனால் அதில் ஆசியாவின் பெரிய கோவிலான அங்கோர்வாட் தராத பிரமிப்பை அந்த ஊர் நமக்கு தந்து இருக்கும்.. கைகூப்பி கும்பிடும் வேளையில் என் அம்மாவின் விருப்ப தெய்வத்திடம் என் அம்மா ஊருக்கு வர முடியாத காரணத்தையும் அவளின் பிரதனைகளையும் சுருக்கமாக சமர்ப்பித்து விட்டு பூசாரி தரும் விபூதியை என் பர்சில் இருக்கும் காகித்தில் என் அப்பா அம்மாவுக்காக எடுத்து வைத்த பின்பு மனம் சற்றே அமைதி படும்.. வெளியே கிடா வெட்டுவதை வேடிக்கை பார்க்கவும் பூக்கள் எழும்பிச்சம்பழம் பிடிக்கவும் நிற்க்கும் கும்பலை விளக்கி விட்டு கண்ணில் படும் சில தாவணி தேவதைகளை ரசித்தப்படியே மீண்டும் காரில் ஏறி பறக்க நேரிடும் பொது.. சிறிய காரிலும் நெருக்கி அமர்ந்த போதிலும் மற்ற சொந்தங்களை நீங்களும் வாங்க நம்ம கார்ல போவோம் என சொல்லும் மாமிமார்களும், எத்தனை ட்ரிப் அடிக்கவும் தயங்காத மாமாக்களும் எஞ்சிய தமிழ் நாகரிகத்தின் அடையாளங்களே!!!

நாளைக்கு பிள்ளைக்கு பரீட்சை, ஆபிஸ்ல வேலை இருக்கு, கடை திறக்கனும் என்ன வந்த சொந்தங்கள் ஒவ்வொன்றாய் மறைய கொஞ்சம் கொஞ்சமாக ஆயவின் முகத்திலும் சித்தியின் முகத்திலும் தனிமை பற்றிக்கொள்ளும் கொடுமையை தாங்க இயலாது நானும் என் பெட்டியை சுமந்த படி சித்தி பெரியம்மாவின் பாசத்தையும்.. மாமாவின் கிண்டல்களையும்.. தம்பி தங்கைகளோடு நாம் செய்த சேட்டைகளும் வெறும் நினைவாய் மட்டும் சுமந்த படியே அந்த தெருவை கடக்கும் வரை நம்மையே பார்த்த படி நிற்க்கும் ஆயா மற்றும் சித்திக்கு கையசைத்த படியே மனமில்லாமல் செல்லும்பொது என் முதுகு பையில் என்னுடைய ஏக்கமும் சேர்ந்து சற்றே சுமைக்கூட்டும்...