Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Tuesday, June 27, 2017

கவிப்பதிகரம்

எழுத்தெல்லாம் கவி பாடுமா...
சொல்லேன்...

கவிக்கு எழுத்து மட்டுமல்ல மொழியே தேவை இல்லை...

குயவனுக்கு களிமண்ணும்,சிற்பிக்கு கல்லும், காதலனுக்கு பாவை விழியும், பக்தனுக்கு ஆலயமணியும் நித்தம் திகட்டாது பற்பல கவி படிக்கும்...
இலக்கணத்தில் மட்டும் கவி வரைய பார்ப்பவன் கவிமூடன்..

கவிதை புகழ் கைதட்டலுக்கு இல்லை...
கவிதை காதலுக்கும் ஊதியமில்லை...
கவிதை மனம் கொய்ய மன்மத பானமும் இல்லை...
அது நம் உள்ளத்திற்கும் சிந்தனைக்கும் இடையே நடக்கும்  ஊடல்...
படைபவனுக்கு ஆற்றில் செதுக்கிய கூழாங்கல்
படிப்பவனுக்கு போதை பழக்கும் பனங்கல்..

காதல் சான்றிதழ் கவிதைக்கு தேவையில்லை...
காதலை பிடித்து நடக்க கவிக்கு மூப்பும் கூடவில்லை...
கட்டில் பிதற்றல் எல்லாம் காதல் கவியும் இல்லை...
கோபம், ஆணவம், கருனை என அனைத்தும் கவியின் பாலம் பற்றி நடக்க இயலும்..
இனியேனும் காதலுக்கும் காமத்திற்கும் மட்டுமே கன்னி அவள் கவியினை தாரைவார்த்து கொல்(ள்)லாமல் இருப்போம்..

Saturday, May 27, 2017

மாதவிடாய் என்னும் நோன்பு

உன் உதிரம் தொட்டு பூவுலகம் உயிர் பிறப்பை வரைந்தவள் நீ...
அந்த உயிரோவிய மைக்கா தீட்டு....

உன் உதிரம் குளித்தே இவுலகில் அந்த
ஈசனும் பிறக்கவேண்டும்...
அந்த பிறப்பின் பொருளுக்கா தீட்டு...

காதோரம் கிசுகிசுக்க அது ஒன்றும்
அசிங்கம் இல்லை...
பூவுலகம் எங்கும் நடக்கும் இயற்க்கை...

பெண்ணாய் பிறந்ததற்காக அது ஒன்றும்
சாபம் இல்லை...
மனிதம் சமைக்கும் இன்றியமையா வரம்..

மனதளவில் நோகி புழுக அது ஒன்றும்
நோய் இல்லை...
மனிதம் செழிக்க இயற்கையின் படைப்பு...

மாதவிடாய் வாழ்நாளில் பாதி காலம் சுமக்கும் பெண்ணே..
ஓய்வெடு தேவை என்றால்..
துள்ளி குதி ஆசை என்றால்...
அர்த்தம் படி புரியும் என்றால்...
அறியாமை தொலைத்திடு இயலும் என்றால்...
உடல் நலம் பேணு சுத்தம் என்றால்...

நீ உருவாக்கிய உருவாக்கிடும் உலகம் இது..
உன் உதிரம் தீட்டு என்றால்..
அதில் குளித்த பிறந்த அவன் பிறப்பும் தீட்டே..

கற்சிலைகள் உன்னுள் ஊறி பிறப்பதில்லையம்மா...
அதனாலோ கோவிலுக்கு உயர் சமைக்கும் உயிர் உதிரத்தின் பொருள் விளங்கவில்லை...

Friday, April 14, 2017

நிலவுக்கு நீலவண்ணம் - 2

அத்தியாயம் 1: http://subumayura93.blogspot.in/2017/01/blog-post_24.html?m=1

--அத்தியாயம் 2--

இதோ எங்களுக்கு திருமணம் ஆகி இன்றோடு 10 வருடங்கள் ஆகி விட்டது. அதற்குள் குறைந்தது ஒரு லட்சம் சண்டை போட்டு இருப்போம், எதோ என் மகள் உமையாளுக்காக இவளை இன்னும் விவாகரத்து பண்ணாமல் இருக்கிறேன், இன்றுவரை எங்களுக்குள் எதுவும் ஒற்று போனதே இல்லை பாரதியார் கவிதையும் எங்கள் மகள் உமையாளையும் தவிர ஆம் திருமணமான சில வருடம் அவளுக்காக பெரிய மீசை வைத்து இருந்தேன் பிறகு அவளை தூக்கி எரிய முடியாத சூழ்நிலையில் அவளுக்காக வளர்த்த மீசையை மட்டுமாவது கோபம் தீர எறியலாம் என மழித்து எறிந்தேன்,

இதே தினம் பத்து ஆண்டுக்கு முன் எத்தனை காதலோடு இருந்தேன் இவள் மேல், ஒரு நொடி இவளை பார்க்க மாட்டோமா என எத்தனை பொழுதுகள் ஏங்கி இருப்பேன். அனால் என்று அவள் தன் ரகசிய காதலனை என் முன்னே.., அன்றே அவளை வெட்டி கொன்றிடலாம் என்று அன்றே தோன்றியது எனக்கு ஆனால் நான்கு வயது குழந்தையாய் நின்ற என் மகள் உமையாளுக்காக இவளை இன்னும் என்னோடு சேர்த்து குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிறேன், ஊர் உலகத்திற்கு இன்றும் நாங்கள் அன்யோன்ய தம்பதிகளே ஆனால் எங்கள் தனிமையில் அவள் என் உடல் உறுத்தும் உடை, செருப்பிடை பட்ட பரல் என எண்ணி காலம் கசக்க கசக்க கழித்து கொண்டு இருக்கிறேன்.

மெதுவாக நான் காரை செலுத்தி கொண்டு இருந்தேன், நாங்கள் திருமணம் செய்த கல்யாண மண்டபத்தை தாண்டி வண்டியை செலுத்துகையில் ஒரு நொடி நான் அவளுக்காக காத்திருந்த வீட்டையும் சிந்துவை முதன் முறை திருமண கோலத்தில் சந்தித்த அந்த ஜன்னலையும் அசைபோடும் மாடு போல் அந்த நாட்களை எண்ணி பார்த்து கொண்டு சென்றேன். திருமண வாழ்க்கை எவ்வளவு அழகாக சென்று கொண்டு இருந்தது எனக்கு, எல்லாம் இந்த தீபக் என் வாழ்க்கையில் வராது இருந்த வரை. திருமணம் ஆனா பெண்ணாய் இருந்தாலும் காதல் வார்த்தை பேசி பழகும் ஆண்களை எல்லாம் அடித்தே கொல்ல வேண்டும், தன் மனைவியிடம் அடுத்தவன் காதல் பேசினால் நம் மனம் தாங்குமா!! அது போல தானே அடுத்தவன் மனைவியிடம் நாம் இப்படி நடந்து கொள்கிறோமே இவளை மணந்த கணவனுக்கு எவ்வளவு துன்பம் இருக்கும் என யோசித்தானா அந்த தீபக் குமார், துரோகி!!!

வண்டியில் ஏறி மகராணி போல் அவள் எப்படி அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டே வருகிறாள்!!, இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லையே ஏன் என கேட்கலாம் என மெதுவாக ஆரம்பித்தேன் "என்ன எதுவும் பேசாம வர?", அவளோ "என்ன பேசுறது என்ன பேசினாலும் திட்டுவிங்க", நான்தான் அவளை சண்டைக்கு இழுக்கிறேன் என்பது போல அவள் சொன்ன வார்த்தைகள் என்னை சூடேற்றின, "ஆமா!! உனக்கு என் கூட பேச என்ன இருக்க போகுது அதான் தினமும் ஆபிஸ்ல தீபக் கூட பேசிடுறியே!!" என பொரிந்து தள்ளினேன், அவளிடம் இருந்து எந்த வார்த்தையும் இல்லை, மெல்ல கண்கள் சிவந்து அழ ஆரம்பித்தாள், "கொஞ்சம் வாய மூடுறியா, வண்டி ஓட்ட முடியல!!'' உடனே அவள் கைக்குட்டையை தன் முகத்தில் வைத்து சத்தத்தை தன்னோடு புதைத்து விசும்பிக்கொண்டே இருந்தாள், அவள் விசும்பல் சத்தம் என்னை மேலும் ஆத்திரமூட்டியது, சத்தமாக ரேடியோவில் பாட்டை வைத்து கத்த விட்டுக்கொண்டே என் பயணத்தை தொடர்ந்தேன். சென்னை மயிலாப்பூர் கோவில் வாசலில் வந்து வண்டியை நிறுத்தினேன் அதே வேகத்தில் என் மனைவியை நோக்கி திரும்பி இங்க அழுது ஏமாத்த யாரும் இல்ல என் அம்மாகிட்டையும் , உமையாள்கிட்டயும் உன் நாடகத்தை போட்டுடாத என வீசும்பிக்கொண்டு இருந்த அவளிடம் கூறிவிட்டு வண்டியை விட்டு இறங்கினேன். வண்டியிலே சில நொடிகள் எடுத்து தன் முதலை கண்ணீரை துடைத்து எடுத்து சிரித்தபடி காரில் இருந்து இறங்கி நடந்து சென்றால், இன்னும் இதுபோல் எப்படி நடித்து ஊரை ஏமாற்ற போகிறாளோ இந்த நாடககாரி, என என்னுள் புலம்பிகொண்டே வண்டியை லாக் செய்துவிட்டு அவளை பின் தொடர்ந்தேன்.

இதோ என் அம்மாவுடன் என் ஆசை மகள் உமையாள் சிகப்பு தாவணி உடுத்தி பம்பரமாய் சுழன்று விளையாடி சிரித்து கொண்டு இருந்தாள், என்னை பார்க்கவும், அப்பா என சொல்லி ஓடிவந்து என்னை கட்டி  அனைத்துக்கொண்டாள், என் மகளின் தலையை வருடிகொண்டே.. அவள் தலையில் முத்தம் கொடுத்தேன் 

இதோ என் இளவரசி.. அன்றைய அழகிய நாட்களின் ஒரே எஞ்சிய அடையாளம்!! இவள் என் மகள்.. என் இருட்டிய வாழ்க்கையில் ஒரே ஒளி

அப்பா வரப்போ பாட்டி வாங்கி கொடுத்தாங்க என தன் கையில் வைத்திருந்த காற்று போன பலூன் ஒன்றை வைத்து இருந்தால், என்ன குட்டி!! இதுல காத்தே இல்ல என வினவ இதை ஊதிக் கொடுப்பா என கொஞ்சி மெல்ல புன்னைகை செய்தபடி ஆர்வமாய் பார்த்த அவள் கண்களை பார்த்தபடியே மெல்ல பலூன் ஊதி கொண்டு இருந்தேன், போதும் போதும் என்ன சொல்லி புடுங்கி தன் அம்மாவிடம் நீட்டி நீ இதை ஊது என்றால், அந்த ஆட்டகாரியோ என்னை நோக்கி ஏளனமாய் புன்னைகைத்த படி அப்பாவே ஊதட்டும் பாவம்ல அப்பா என அந்த சிறுக்கி நடித்தால், நான் ஆத்திரம் கொள்ளாது என் கவனத்தை என் தாய் மீது வீசினேன், என் அப்பா ஒரு விபத்தில் இறந்து விட ஒரு இரும்பு மனுஷியாய் தன் தனிமை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். அனால் என்னை கட்டிய வேசியோ.. ச்சே.. என எண்ணிய படியே மீண்டும் இந்த உலகம் திரும்ப சிந்து அந்த பலூனை ஊதி முடித்து இருந்துந்தால், இதைத்தான் இன்னைக்கு கட்டி புடிச்சு தூங்க போறேன் என்று சிந்துவின் கன்னத்தில் என் மகள் முத்தம் பதித்தால், உடனே என் அம்மா பாருடா உமையாள் எப்படி கஷ்ட படுறானு இந்த வயசுல அவளுக்கு முக்கியம் உங்க அன்பு தான் பணம் இல்லை இப்டி புருஷனும் பொண்டாட்டியும் ஓடி ஓடி சம்பதிக்குறது யாருக்கு என வழக்கம் போல் வினவ என் மனைவியோ உமையாளை இழுத்துக் கொண்டு கோவிலுக்கு உள்ளே போனாள், 

நானோ "அம்மா தினமும் செங்கல்பட்டுல இருந்து மயிலை வரது எல்லாம் கஷ்டம், அதுவும் இல்லாம நாங்க எப்போ வேளைக்கு போறோம் எப்போ வறோம்னு எங்களுக்கே தெரியல அவள தனிமையில கிடப்பா, உன் கூட இருந்தா என் ஆச மக உன்ன போல ஒரு தைரியமான பொண்ணா இருப்பா" என சொல்லி முடிக்கும் போதே ஏன் என் மருமக தைரியத்துக்கு என்ன குறைச்சல், சரி இன்னும் ஆறு மாசத்துல annual leave வரும் அப்போ வேற school பாத்து அவள உன் கூட வச்சுகொ அவ்ளோதான் என கச்சிதமாய் சொல்லிவிட்டு கோவிலுக்கு உள்ளே சென்றால் நானும் சரி இன்னும் ஆறு மாசம் கழிச்சு வேற காரணம் கிடைக்காமலா போகும்!! இப்பிடி ஒரு குணம் கேட்ட பொம்பளை கையில வளருறத வீட என் மக இப்டி அப்பா அம்மாவ பாக்காம வாழ்ந்திடலாம் என எண்ணிக்கொண்டே என் அம்மாவை பின்தொடர்ந்தேன், உள்ளே என் மகள் சிந்துவின் இடுப்பில் அமர்ந்து சுவாமி அபிசேகம் பார்த்து கொண்டு இருந்தனர் அப்பபோ என் மகள் சிந்துவை கொஞ்சுவது சிரித்து பேசுவதும் சற்றே எனக்கு எரிச்சலை உண்டாக்க 'எய் உமையாள் இறங்கி இங்க வா பேசாம சாமி கும்பிடு என அதட்ட சற்றே முகம் வாடிய படி அம்மாவின் இடுப்பில் இருந்து மெல்ல சறுக்கி கொண்டு அவள் காலை அணைத்த படி நின்றாள், இந்த சனியன் வந்தா எப்டி தான் என் மகள மயக்குத்தொ.., ச்சை!! என எண்ணிக்கொண்டே கடவுள் மெல் கவனம் செலுத்த அபிசேகம் முடிந்து ஒரு மாலையை கொண்டு வந்து ஐயர் எங்கள் இருவர் தோளிலும் ஒருசேர போட என் அம்மாவை முறைத்தேன் ஒரு நொடி என் அம்மா ஆசைக்காக நின்றுவிட்டு நெருப்பு சுடு பட்ட பூனை போல அவள் தேகத்தில் இருந்து விலகி ஓடினேன்.. எல்லா வேலையும் முடித்து வெளியில் வரும் போது என் அம்மா அடேய் என்ன ஒரு பொட்ட புள்ளை போதும்னு நினைச்சியா.. எனக்கு பேரன் வேணும் உன் பொண்டாட்டிகிட்ட சொல்லி அழுத்துடேன் நீயாச்சும் கவனம் வச்சுகொ அடுத்த கல்யாண நாள் நீங்க பேரனை கைல வச்சுகிட்டு கொண்டாடனும் புரியுதா என அதட்ட வெறும் புன்னகையை பதிலாய் கொடுத்துவிட்டு காரை கிளப்பினேன், என் மகளுக்கு ஜன்னல் வழியாய் கையசைத்த படியே காரை கோவிலை விட்டு வெளியே செலுத்தினேன், ரேடியோவில் சிவராத்திரி இனி துக்கமெது என கமல் பாடல் காமம் தோய்த்து ஓட நானோ கட்டிலில் கை கால் உதற அமைதியாய் புது மாப்பிள்ளைக்கு உண்டான காம வெட்கம் பொத்திக்கொண்டு என் அவளுக்காக அமர்ந்து இருந்தேன், அந்த பாடல்!! கமல் அந்த பெயர் தெரியாத நடிகையோடு எப்படி நெருங்கி காமம் கொஞ்சி இருப்பார். ச்ச முதல் ராத்திரியில் கேட்க்க வேண்டிய பாடல் தான் அது, அவள் வரட்டும் நாமளும்.இந்த பாடலின் அர்த்தத்தை இன்று புரிந்து கொள்ள வேண்டியதுதான்!!

அத்தியாயம் 3ல் தொடரும்

Wednesday, March 8, 2017

கலாச்சார பதுமை

நீர்கமல கண்களும்
நீலவேணிற் குரல்களும்
மாந்தளிர் மேனியும்
மட்டுமே
பெண்மையின் முழுமையும் அல்ல

மின்னும் பொன்னும்
மிளிரும் பட்டும்
அடர்த்தி ஆபரணமும்
மட்டுமே
பெண்களின் தேவையும் அல்ல

ஆடவன் காமம் சுடர்விட திரியென விருப்பம் இன்றி எரிந்தாய்,
சீர்வரிசை சிட்டையில் கடைசி பொருளாய் நீயும் இணைந்தாய்,
தெருவிலும்க்கூட மாற்றாடவரின் தொல்லை பல தாங்கினாய்,
சிறுபிள்ளை பருவத்திலும் மாராப்பை மறைத்து பலகினாய்,

பறக்கும் நேரம் அதுவாய் பிறக்காது - பெண்மயிலே
உனக்கு தோகையும் புதிதாய் இனி முளைக்காது
கங்காரு குட்டியை போல் பை அமர்த்தி கிடந்தது போதும்
துள்ளி குதி - உலகம் மிகவும் அழகானது

ஆண்களின் தாபம் தீர்க்கும் காமகுளிர்பானமா நீ,
மதிப்புகளை தொலைத்து வாழ நிரந்தர அடிமையா நீ,
கனவுகளை துறந்து குடும்பம் சுமக்கும் சுமைதாங்கியா நீ,
படுக்கையை மட்டும் பங்கிட என்றும் விலைமாதுவா நீ,

மறைக்கும் மேகம் ஒரு நிலையாய் இருக்காது - வான் நிலவே
இரவெல்லாம் என்றும் தேய்பிறை நிலைக்காது
பாடும் கிளியை போல் இரும்பு கூட்டில் இருந்தது போதும்
இறக்கை விரி - வானம் மிகவும் விசாலமானது

Thursday, February 2, 2017

ஆயாவின் வீடு

கமற்கட்டு கைகடிகாரமும்
மஞ்சள் வர்ண பஞ்சுமிட்டாயும்.. இருபதாம் நூற்றாண்டு பார்த்திடாத ஒன்று... எத்தனை பகுத்தறிவு வளர்ந்தபோதிலும் ஆட்டின் ரத்தம் ஊற்றிய சோற்றை உருட்டி வானத்தில் எரிந்து அது மீண்டும் பூமியில் விழாமல் கருப்பன் சாப்பிட்டுவிடுவான் என நம்பி  பயத்தில் குனிந்து கீழே பார்க்கும் மக்களும் நம்மிடத்தே உண்டு...

என்னை பொறுத்த மட்டிலும் இவ்வளர்ந்த நாகரிகமே மூடத்தணுமும் எழில் அழகும் கொஞ்சும் பல பண்டிகைகளை சற்று நம்மிடையே மழுங்க செய்திருக்குறது..

ஐடி ஆபிஸில் அமர்ந்து பொங்கல் தீபாவளி அன்றைக்கு மட்டும் என் தாத்தன் அன்றாடம் உடுத்திய வேட்டியை வேல்க்ரோத் வைத்து ஒட்டிக்கொள்ளும் சமுகத்தின் மிச்சமாகிய நான் சென்ற என் கிராமத்தின் திருவிழா விசிட் இது.. என் கூட்டத்தின் நினைவுகள் இது

என் அம்மா வழி பாட்டியின் (ஆயா)  ஊர் "கிழச்சேவல்ப்பட்டி", என் ஆயா வாக்க பட்ட ஊர் அது.. என் அம்மா விளையாடி திரிந்த ஊர் அது... தலை பிரசவத்திற்காக அவள் அம்மா வீட்டிற்க்கு சென்று என்னை பேருவலியுடன் பெற்றடுத்த ஊர்.... இன்று நகரத்திற்கும் கிராமத்துக்கும் மத்தியில் மாட்டி முழிக்கும் ஊர் அந்த கீழச்சேவல்பட்டி... திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழி சிவகங்கை பரமக்குடி போகும் பேருந்தே அந்த ஊரின் அடையாளம் சொல்லும்.. "பொன்னமராவதி ஆர்ச்சுல எறங்கி வள்ளி ஐஸ்சு கம்பெனி எதுன்னு கேட்டா நம்ம வீட்டுக்கு வந்திடலாம்" என என் ஆயா வழி சொல்லிய நாட்கள் என் நெஞ்சில் இன்றும் மிதக்கும் பசுமையான நினைவுகள்... மாமா, மாமி..பெரியப்பா.. பெரியம்மா... அண்ணன், அண்ணமண்டி(அண்ணி) என என் ஆயா வீடே நிரம்பி வழிந்தது பொன்னழகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக... மேலும் வைத்தீஸ்வரன் கோவில் பாதயாத்திரை, நவராத்திரி, படைப்பு போன்ற சில தேர்ந்தெடுக்கபட்ட நாட்களில் தான் என் ஆயா கண்ணில் முழு நிறைவும் ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும்... மேலும் பேரன் பேத்திகள் ஆண்டு விடுமுறைக்கு வரும்போது இதில் முப்பது சதவிகித ஆனந்தத்தை பார்க்கலாம்...

வீட்டில் நான் நுழையும் முன்பே வாசலில் ஓடி வந்து "வாங்க அண்ணா" என்று சொல்லிவிட்டு ஓடும் குட்டிஸ்களை பார்க்கும் போதே அப்பாடி ஒரு வழியா வீட்டுக்கு வந்துட்டோம்னு தோன்றும்.. உள்ளே போக அத்தனை சொந்தங்களின் வரவேற்பையும் ஒன்று விடாமல் வாங்கி "ஆமா" என்ற ஒற்றை பதிலை தூவியபடியே என் கண்கள் முதலில் தேடுவது என் சித்தியைத்தான்.. சற்றே ஓய்வுக்கு பின் ஒட்டு மொத்த குடும்பமே ஒன்றாய் அமர்ந்து அரட்டை அடிக்கும் அந்த ஒரு சுகத்திற்காகவே தினமும் ஒரு விஷேசம் வராதா என தோன்றும்.. ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து.. சிறிது கதை பேசி.. சிரித்து கேளிக்கைகள் செய்து ஒரே நேரத்தில் அலாதி இன்பத்தை அனுபவித்து கொண்டிருக்கையில் உதிர்ந்த முத்து பற்கள் வழியே நடுங்கிய குரலில் ஒலிக்கும் "பாலு.. நல்லா இருக்கியா" என்ற  ஆயாவின் அந்த ஒற்றைவரி கேள்வியில் அத்தனை சுகமும் வந்து தோளில் உட்கார்ந்துகொள்ளும்.. மதிய நேரம் நெருங்கையில் மாமாகழுடன் அமர்ந்து வாழையிலை பந்தியில் தொந்தி நிரப்புவது அலாதி இன்பம் அதன் இடையிலும் மாமிக்கள் நாம் அசந்துஇருக்கும் நேரம் நம் இலையை நிரப்புவது ஒரு குட்டி அதிர்ச்சி... கழுத்துவரை உண்ட போதிலும் சக்கரை நோய்க்கு பயந்து ஆயா ஆக்கி வைத்த கேப்பை கூழ் கட்டியில் இரண்டை மோர் கலந்து அடித்ததால் வரும் உண்ட மயக்கம்.. நவீன மதுக்களில் கிடைக்குமா என்பது சந்தேகமே... அனைவரும் களைப்பில் அயர்ந்திட ஆயாவின் கால் பிடித்து கொண்டே பேசும் பொழுதுகள் சற்றே புத்துணர்ச்சி தரும் எனக்கு..

சாயங்காலம் மாமக்களின் காரில் ஏறி கோவிலை நோக்கி புறப்பட போகும் வழியில் மாமா, பெரியம்மாவின் பால்ய பருவ நினைவுக்களை பேசிக்கொண்டே செல்லும் பொது அங்கே car ரேடியோவில் இசைத்து கொண்டிருந்த இளையராஜா சற்றே மங்கித்தான்
போய் இருப்பார்.. கோவிலுக்கு சென்று எங்கள் வீட்டு மாப்பிள்ளைகளாகிய அய்த்தான் பெரியப்பாக்களோடு கோவில் திண்ணையில் அமர்வதும், மாமக்கள் அண்ணன்களோடு ஓடி ஓடி திரிவதும் நமது தனிப்பட்ட விருப்பம்..

சின்ன கோவில்தான் அனால் அதில் ஆசியாவின் பெரிய கோவிலான அங்கோர்வாட் தராத பிரமிப்பை அந்த ஊர் நமக்கு தந்து இருக்கும்.. கைகூப்பி கும்பிடும் வேளையில் என் அம்மாவின் விருப்ப தெய்வத்திடம் என் அம்மா ஊருக்கு வர முடியாத காரணத்தையும் அவளின் பிரதனைகளையும் சுருக்கமாக சமர்ப்பித்து விட்டு பூசாரி தரும் விபூதியை என் பர்சில் இருக்கும் காகித்தில் என் அப்பா அம்மாவுக்காக எடுத்து வைத்த பின்பு மனம் சற்றே அமைதி படும்.. வெளியே கிடா வெட்டுவதை வேடிக்கை பார்க்கவும் பூக்கள் எழும்பிச்சம்பழம் பிடிக்கவும் நிற்க்கும் கும்பலை விளக்கி விட்டு கண்ணில் படும் சில தாவணி தேவதைகளை ரசித்தப்படியே மீண்டும் காரில் ஏறி பறக்க நேரிடும் பொது.. சிறிய காரிலும் நெருக்கி அமர்ந்த போதிலும் மற்ற சொந்தங்களை நீங்களும் வாங்க நம்ம கார்ல போவோம் என சொல்லும் மாமிமார்களும், எத்தனை ட்ரிப் அடிக்கவும் தயங்காத மாமாக்களும் எஞ்சிய தமிழ் நாகரிகத்தின் அடையாளங்களே!!!

நாளைக்கு பிள்ளைக்கு பரீட்சை, ஆபிஸ்ல வேலை இருக்கு, கடை திறக்கனும் என்ன வந்த சொந்தங்கள் ஒவ்வொன்றாய் மறைய கொஞ்சம் கொஞ்சமாக ஆயவின் முகத்திலும் சித்தியின் முகத்திலும் தனிமை பற்றிக்கொள்ளும் கொடுமையை தாங்க இயலாது நானும் என் பெட்டியை சுமந்த படி சித்தி பெரியம்மாவின் பாசத்தையும்.. மாமாவின் கிண்டல்களையும்.. தம்பி தங்கைகளோடு நாம் செய்த சேட்டைகளும் வெறும் நினைவாய் மட்டும் சுமந்த படியே அந்த தெருவை கடக்கும் வரை நம்மையே பார்த்த படி நிற்க்கும் ஆயா மற்றும் சித்திக்கு கையசைத்த படியே மனமில்லாமல் செல்லும்பொது என் முதுகு பையில் என்னுடைய ஏக்கமும் சேர்ந்து சற்றே சுமைக்கூட்டும்...

Tuesday, January 24, 2017

நிலவுக்கு நீலவண்ணம்

-- அத்தியாயம் 1 --
கருநீலத்தில் பொன்மஞ்சள் பூசியத்தை போல் இருந்தது வானம், விடியற்காலை 4.30மணிக்கு மேல் இருக்கும், வாட்டர் ஹிட்டர்லில் வெந்நீர் காயும்வரை வாயில் நுரை தள்ள பல்துலக்கி கொண்டே கல்யாண கனவில் மிதந்து கொண்டு இருந்தேன்... இன்னேரம் நாளை எனக்கு முதலிரவே முடிந்திருக்கும் என எண்ணிய நொடி என்னையும் அறியாமல் வந்த பெருமூச்சு பகல்நேர பணியையும் சற்று கதகதபாக்கி இருக்கும். வெந்நீர் குளியல், புத்தாடை, விடியற்காலை பரபரப்பு எல்லாம் என் சிறுவயது தீபாவளி கொண்டாட்டத்தை நினைவூட்டியது. மெல்ல அம்மாவிடம் சென்று ஆண்களுக்கே உரித்தான அரை நாணத்துடன் 'அம்மா ஓகேவா?' என வினவினேன். இருந்த வேலை படபப்பிலும் ஒரு நொடி பார்த்த அவள் ஏன்டா!! மாப்பிள்ளை அதுவுமா ஏன் இவ்ளோ பெரிய மீசை என இன்னும் தன் மகன் குழந்தை என எண்ணி திட்டிய விதத்தை கிரகித்து கொண்டே சொன்னேன்.. அம்மா!! போமா மீசையெல்லாம் எடுக்க முடியாது.. உடனே பதிலுக்கு "மம்க்கும், இனி நான் சொன்னா எங்க கேக்க போற வரவ குமட்டுல குத்தி சொல்லுவா அப்போ மண்டை ஆட்டுவ" என சொல்லி தன் வேளையில் மீண்டும் லயித்தால். நானோ அடுத்து என்ன செய்வது என்ன தெரியாமல் நிற்க. டேய் வேலைக்காரி அக்காகிட்ட காபி வாங்கி குடிச்சிட்டு மண்டபத்துக்கு கிளம்பு என அப்பாவின் அதட்டல். மரகதம் அக்காவின் காபியை மெல்ல உரிஞ்சிகொண்டே என் அலைபேசியில் செய்தி படிக்க ஆரம்பித்தேன்.. இல்லை!! படிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தேன், ஒவ்வொரு வார்த்தை மத்தியிலும் சிந்துவின் நினைவே ஓடிக்கொண்டு இருந்தது.. குடுத்த காபியை குடித்துவிட்டு வேகமாக கிழே நிற்க்கும் காரில் ஏறி அமர்ந்தேன்.. டிரைவர் காரை ஓட்ட நான் மீண்டும் சிந்துவை நோக்கி என் எண்ணங்களை ஓடவிட்டேன். அவள் 'சிந்து மார்க்கண்டேயன்', விரைவில் 'சிந்து நிர்மலன்' ஆக போகிறாள், அவளை பல முறை என் அலுவலகத்தில் பார்த்து இருக்கிறேன் அப்பொழுது அழகிய நல்ல பெண் என்கிற எண்ணத்தை தவிர வேறுஎண்ணங்கள் இல்லை இப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என எண்ணியதுண்டு அனால் இவளையே மணப்பேன் என கனவிலும் எண்ணவில்லை. கார் ஓர் இடத்தில் நின்றது திருமண மண்டபத்திற்கு அருகில் உள்ள வீடு அது, அங்கே என்னை தங்க வைத்து விட்டார்கள், மாப்பிள்ளை அழைப்பு முடிந்துதான் அவளை பார்க்க வேண்டுமாம்!! கடிகாரத்தை கடிந்துக்கொண்டே காத்திருந்தேன், அப்பொழுது கல்யாண மண்டபத்தின் மாடி ஜன்னலில் இருந்து ஒரு அழகிய உருவம் என்னை பார்த்தது.. ஆம்!! அது அவள்தான்.. தங்கத்தை இழைத்தது போல ஒரு புடவை, அதில் தேவதை போல் மின்னினால் அவள், மருதாணி கரங்களால் மீசையை முறுக்குவது போல் பாவனை செய்தால் நான் உணர்ப்பால் உணர்ந்து என் மீசை சற்றே முருக்கிவிட்டேன்.. காதலாய் சிரித்து அதை ஆமோதித்தாள், நிச்சயம் ஆன நாள்முதல் தினம் அலைபேசி உரையாடலில் நாங்கள் இருவரும் பேசி அதிகம் புலங்காகித்தது என் மீசை மற்றும் பாரதியாரின் கண்ணன் பாட்டுதான்..
மெல்ல கதிரவன் வான் நோக்கி எறிச்செல்ல கட கட வென மாப்பிளை அழைப்பு முடிந்ததது ஊர் முழுக்க மென்னடை பழகவிட்டார்கள் என்னை, போவோர் வருவோர்கள் அனைவரும் பார்க்கும் பொருட்காட்சி பொம்மை போல் காட்சியளிப்பதாய் தோன்றியது எனக்கு. திருமண மண்டப நுழைவாசலில் என்னை வரவேற்க அவள் நின்றிருந்தாள், அவள் சூடிய வைரங்கள் சற்றே மங்கின அவள் நாண புன்னகையில். நொடி நேரம் தவறாது என் முன் ஒரு தடுப்பினை பிடித்தனர் என் உறவினர்கள் மேலும் சிறுவர்கள் வந்து தடுப்பின்மேல் பூ எரிய. எதிரில் என் எதிர்கால துணை நின்றும் அவளை காண இயலாததை என்னை தடுப்பின் வழி சிதறிய அவள் பாதங்களை பார்த்தபடி நின்றேன். மெல்ல அவள் பாதம் வேறு திசையில் பயணிக்க என் முன் தாங்கி பிடித்த திரை விலகியது... நேரத்தை என் மௌனத்தால் கொன்று குவித்தப்படி அமர்ந்து இருந்தேன். தலையில் சூடிய செயற்கை தலைப்பாகை வேறு சற்றே உறுத்தியது, அங்கே அவள் சபையில் அவள் சித்தி சொல்லும்படி கைகளை குவித்து ஒரு தேங்காயை தாங்கி நின்றாள். அனைவரும் காலை சிற்றுண்டி சாப்பிட சென்றுவிட என்னை சுற்றி சிறுவர்கள் மட்டுமே அமர்ந்து இருந்தார்கள்.
என்னவள் சற்றே பதட்டத்துடன் செய்யும் சம்பிரதாயங்களை பார்த்து ரசித்த படி அமர்ந்து இருந்தேன். அவள் ஒரு முறை அலைபேசியில் கூறியது நினைவுக்கு வந்தது "எதுக்கு செய்யுறொம்னு தெரியாம ஏன் சடங்குன்னு ஆட்டுக்குட்டி போல செய்யணும்" அப்படி வினவியவள் இப்பொழுது சித்தியின் அதடலுக்கு அடங்கி பிடி என்றால் பிடிக்கிறாள் வை என்றால் வைக்கிறாள். அவளின் நிலை எண்ணி சற்றே நகைக்கத்தான் தோன்றியது எனக்கு.
அதோ இதோ என இழுத்த நொடிகள் இப்பொழுது வந்து விட்டது, என் எதிரில் இருந்த கால் அடி உயர மனைபலகையில் அவள் பெரும் படைசூல வந்து ஏறி நின்றாள் என் விழிகளில் இருந்து ஒருஅடி தொலைவில் தான் இருந்தாள் இருப்பின்னும் அவளின் கண்களை நிதானித்து என்னால் காண இயலா வண்ணம் அவ்வளவு நெரிசல் மற்றும் கேளிக்கைகள் சூழ்ந்து இருந்தன.. சுற்றி நின்ற தாய்மாமாக்கள் ஒவ்வொன்றாய் சொல்ல மாலை மாற்றி மாங்கல்யம் பூட்டியாயிற்று.. இந்தோ இந்த நொடி என்னவள் இனி என்றுமே என் ஆசைக்காதலி என் அன்பு மனைவியாய் மாறிவிட்டால்..
பின்பு தம்பத்தியராய் உலாவி ஆசி சம்பாதித்தோம்..
மதிய உணவும் கல்யாண பரிசு வழங்குதலும் ஒரே நேரம் நடை பெற கல்யாண களைப்பை ஒருசேர அனுபவித்தோம்,
ஒருவழியாய் சற்றே தனித்து நிதானித்து கொள்ள நேரம் கிடைத்தது..  சாயங்காலம் மணி ஒரு நான்கு இருக்கும்.. மண்டபத்தில் இருந்து கிளம்பினோம்.. கார் மெல்ல அதன் வேகத்தில் நகர நான் சற்றே தயங்கி அவள் கரம் பற்றினேன். அப்போது எதிரில் ஒரு சிகப்பு ஹூண்டாய் சிட்டி கார் வந்து நின்றது.
என்னை அறியாமல் என் மனம் படபடத்தது சற்றே வேர்த்தும் போய் விட்டேன் ஜன்னல் திறந்திருந்தும் எனக்கு ஏனோ சுவாசிக்க காற்று போதவில்லை என ஒரு பிரமை, மீண்டும் நிதானித்து கொண்டு உற்று நோக்கினேன் ஆம் அது நான் தான் எதிரில் உள்ள வண்டியில் நானே ஒரு நாற்பதை ஒத்த வயதில் அமர்ந்திருக்கிறேன் அருகில் என் அருமை மனைவி சிந்து முப்பது மத்தி வயதில் உள்ள ஒரு பெண் போல் எதிரில் உள்ள காரில் அமர்ந்து இருக்கிறாள் என்னுடன்.. மீண்டும் மண்டைக்குள் இடியென ஒரு சப்தம் நிற்காத குழப்பம்


அத்தியாயம் 2: http://subumayura93.blogspot.in/2017/04/blog-post.html?m=1

Friday, January 6, 2017

என்னுள் சிந்தும் ஒருதலை காதல்

சிந்தும்... சிதறும்...
தத்தும்... ததும்பும்..
எந்தன் காதல்...
அவள் சிந்தூர செவ்விதல் மத்தியில்...

கெஞ்சும்..  கதறும்...
கொஞ்சும்.. குலையும்...
எந்தன் இதயம்...
அவள் கயல்விழி கடைக்கண்
பார்வையில்...

சுண்டும்.. சுருங்கும்...
மருளும்... ஒடுங்கும்...
எந்தன் ஜீவன்...
அவளின் தேர்ந்த கார்குழல்
சுருள்களில்...

தெளிவான புத்தி கொண்டு
இருந்தேன் அன்று...
உன் அளவான இடையால் புத்திகேட்டு திரிகிறேன் இன்று...
புத்தனை போல் சாந்தம் கொண்டு
சிரித்தேன் அன்று...
சிங்கார நடையாள் உன் ஆசையில் புத்தம் துறந்தேன் இன்று...

நெட்டி முறிக்கும் உந்தன்
குட்டி விரலின் ஒரு சீண்டல் பொதும்...
முந்நூறு ஆண்டுகள் வாழ்திடுவேன்..
கொட்டி சிரிக்கும் உந்தன்
அலர் புன்னகை என்னிடம் சிந்திடு போதும்...
நிலவையும் நீராட்டி விற்றிடுவேன்...

மலரும் மயங்கியது.. ஆடையும் நானியது... மையும் சிவந்தது...
காலமும் உறைந்தது..

மலரும் மயங்கியது..
உன் மயிரிதழ் அது தீண்டுகையில்...
ஆடையும் நானியது..
உன் மேனியதில் நீ பூட்டுகயில்...
மையும் அது சிவந்தது..
உன் கண்மணி அதனில் பூசுகையில்...
காலமும் உறைந்தது..
உன்தன் கை கடிகாரம் நீ பார்க்கையில்...

எதுவும் நிலை இழந்து காதல் கொள்ளும் அத்துணை அழகியடி நீ
பிரமனும் சற்றே தடுமாறி இருப்பான் படைக்கயில் அப்படி ஓர் அழகியடி.. நீ

மன்மத மதுவே... காதல் ரதியே. 
கயவன் கிளியே... பாறை மயிலே..

மன்மத மதுவே...
பார்வை எனும் பாணம் தொடுக்கிறாய்...
காதல் ரதியே..
ஆண்மகன் இதயம் துளைக்கிறாய்
கயவன் கிளியே...
மென்காமம் என்னுள் தினிக்கிறாய்
பாறை மயிலே..
விரைவாக வானில் சிறகடிக்கிறாய்

இந்த பிறவில் தவம் கொள்கிறேன்.. மீண்டும் ஒரு பிறவி வேண்டும் என்று...
மறு பிறவியில் பயனாய் உன்னை
கொள்வேன்.. என் பிறப்பின் அர்த்தம் நீ என்று...